ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக நிற்பது நான் தான் – தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்

Must read

thu
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் சார்பில் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருசிலர் மாற்றப்பட்டுள்ளார்கள். அப்படி மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கலாம்.
மாற்றத்திற்கான அடிப்படையும் அவர்கள் அறியாததல்ல. எனினும் முதலில் அறிவிக்காமல் இருந்திருக்கலாம்; அறிவித்துவிட்டு பின்னர் வாய்ப்பு நழுவிவிட்டதே என்ற மனக்குறை அவர்களுக்கெல்லாம் இருக்கலாம். அவர்கள் எல்லாம் வேறு வழியின்றி செய்யப்பட்ட மாற்றத்தினைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று முதலிலேயே கேட்டுக் கொள்கிறேன்.
நான் முன்பே தெரிவித்தவாறு, இந்தத் தேர்தலில் தி.மு.க.தான் அண்ணா தந்த உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது, வேட்பாளராக ஒவ்வொரு தொகுதியிலும் நிற்பது மு.கருணாநிதி தான் என்ற எண்ணத்தை மனதிலே நீ செதுக்கி வைத்துக் கொள்வாயானால், பொதுவான நோக்கத்திற்காக மாற்றத்திற்கு ஆளான வேட்பாளர்கள் எவ்வித வருத்தத்திற்கும் ஆளாகத் தேவையிருக்காது.
அடுத்து, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்னை நேரில் சந்தித்து, தாங்கள் செய்த குற்றம் என்ன என்றும், தாங்கள் தி.மு.க.வுக்காக உழைக்கவில்லையா என்றும், தங்களை ஏன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் கேள்விக்கணைகளைத் தொடுத்த நேரத்தில் என்னால் அவர்களுக்கு பதில் சொல்லி அமைதிப்படுத்த முடியவில்லை.
அவர்கள் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு முன்பு ஒரு சிலர் என்னிடம் வலியுறுத்த வந்தவர்கள், பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் என்னைச் சந்திக்கவே வரவில்லை. உதாரணம் கூற வேண்டுமேயானால், தி.மு.க.வுக்காக நீண்ட நெடுங்காலம் உழைத்தவர் ஆற்காடு வீராசாமி. ஏன் தி.மு.க.வின் பொருளாளராகவே இருந்து சிறப்பாகப் பணி புரிந்தவர். சிறைக்குச் சென்று செவிப்புலனை இழந்திடும் அளவுக்குக் கடுமையாக அடிபட்டவர்.
அவருடைய மகனுக்காக இந்த முறை வாய்ப்பு கேட்டார். அளிக்க முடியவில்லை. அதுபோலவே தஞ்சையில் எல்.கணேசன். தி.மு.க.வில் மாணவர் இயக்கம் தோன்றவும், மாணவர்களை மொழிப் போராளிகளாக மாற்றவும் காரணமாக இருந்தவர். அவரும் தன் மகனுக்காக வாய்ப்பு கேட்டார். அளிக்க முடியவில்லை. அந்தத் தொகுதியில் வேறு யாருக்கோ வாய்ப்பு அளிக்கப்பட்டு விடவில்லை. தி.மு.க.விற்காக தொடர்ந்து உழைத்து மறைந்து விட்ட தம்பி பூபதியின் மகளான டாக்டர் அஞ்சுகம் பூபதிக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இவர்களும், இவர்களைப் போன்ற வேறு சிலரும் வாய்ப்பு கிடைத்தாலும், இல்லை என்றாலும் தி.மு.க.வுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அண்ணா தந்த லட்சியங்களுக்காகவே வாழ்பவர்கள், வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு.
வாய்ப்பு கிடைக்காதவர்கள், வாய்ப்பு கிடைத்து பின்னர் மாற்றப்பட்டவர்கள் ஆகியோர் தி.மு.க. வெற்றி பெற்றால், அதுவே தங்கள் வெற்றி, அந்த வெற்றியில் நமது பங்களிப்பும் வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு பணியாற்றிட வேண்டுமென்று உங்கள் அண்ணன் என்ற முறையில் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு முறை சென்னையிலே தேர்தல் பிரச்சாரத்திற்காக நானும் ஆற்காடு வீராசாமியும், மாவட்டச் செயலாளர் அன்பழகனும் புறப்பட்ட போது, நிருபர்கள் என்னைச் சுற்றி நின்று கேட்டார்கள், “ஜெயலலிதா, இலவசங்களாக அறிவித்துக் கொண்டிருக்கிறாரே, நேற்றைக்குக் கூட ஒரு இலவசத்தை அறிவித்தார். இன்றைக்குக் கூட ஒரு இலவசத்தை அறிவித்திருக்கின்றார். நீங்கள் என்ன இலவசம் அறிவிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
நான் சொன்னேன். “இலவசமாக அறிவிக்க என்னிடத்திலே எதுவும் இல்லை. நான்தான் இருக்கிறேன். என்னைத் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக அறிவிக்கிறேன்” என்று சொன்னேன். இந்த இலவசத்தை, என்னைத் தவிர, என்னோடு போட்டி போட்டுக் கொண்டு யாரும் அளிக்க முன்வர முடியாது என்ற தைரியத்தில் நான் சொன்னேன்.
தற்போது கூட ஆளுங்கட்சியின் சார்பில் இதுவரை தேர்தல் அறிக்கை அளிக்கப்படவில்லை.
யார் அளிக்கும் அறிக்கை நடைமுறைக்கு வரும், யார் சொன்னபடி செய்வார்கள் என்பதை அனுபவரீதியாக நமது மக்கள் நன்றாகவே அறிவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article