சென்னை: நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் நடந்து கொள்வதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை என சென்னை  உயர்நீதிமன்றம் அதிகாரிகளை கடுமையாக சாடி உள்ளது..

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிகாரிகளின் இதுபோன்ற  செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையில் கட்டிய வீட்டை காலி செய்யக் கோரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தவை எதிர்த்தும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் செல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பதை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக நடந்துகொள்கின்றனர்.  நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்களை அகற்றாத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும்  கடுமையாக எச்சரித்தனர்.

முன்னதாக,  2021ம் ஆண்டு, இதுபோன்ற வழக்கின் விசாரணையின்போது,   தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில்  உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதாவது,  சென்னை சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர்நிலை, பண்ருட்டியில் உள்ள செட்டிப்பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் வடவம்பாலம் பாசன கால்வாய், மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி, கீழ்மருவத்தூர் ஏரி, கடலூரில் வி.மாத்தூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம், சோத்துப்பாக்கம் ராஜா உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த தனித்தனி வழக்குகள்  அப்போதைய உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது,   அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், சிறப்பு அரசு பிளீடர் அனிதா ஆகியோர் ஆஜராகி, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் , ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது. சித்தாலப்பாக்கம் ஏரியை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, நீர்நிலைகளின் எல்லைகள் குறித்து சென்னை முழுவதும், ஜிபிஎஸ் கருவி மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் அளவில், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, நலச்சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என குழு அமைத்து மாதம்தோறும் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டப்படாது. முக்கியமான நீர்நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லை கற்கள் நடப்படும்.உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9802 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தும் முன்னோடி திட்டத்தை சிட்லப்பாக்கம் ஏரியில் முதல்கட்டமாக அமல்படுத்த உள்ளோம். நீர் நிலைகளை மீட்டு அதை பாதுகாப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படும்.

நீர்நிலைகளில் ஆக்கிரமித்து குடியிருந்தவர்களுக்கு மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தரப்பட மாட்டது.

சம்பந்தப்பட்ட நிலத்தை பதிவு செய்வதற்கு முன்னால் பதிவுத் துறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடுவெடுக்கப்பட்டுள்ளது.

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு புனரமைக்கப்படும். இதில் 147 நீர்நிலைகள் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள இடங்களில் வீட்டு வரி விதிக்கப்பட மாட்டாது. அந்த வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது.

தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்துவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரசு உத்தரவாதத்தை  தவறும்பட்சத்தில் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும் எச்சரித்த உயர்நிதமன்றம்,  ஏற்கனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் சமரசமோ, கருணையோ காட்டாது என்று கூறி விசாரணையை  ஒத்தி வைத்தனர்.

ஆனால், இன்றுவரை நீர்நிலை அக்கிரமிப்புகள் தொடர்கதையாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

[youtube-feed feed=1]