கேன்பரா:

நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஆதரவு தெரவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர் ஒருவர் முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார்.


நியூசிலாந்தின் கிறிஸ்த்சர்ச் நகரில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆஸ்திரேலிய தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்திருந்தார்.

முஸ்லிம்கள் குடியேற்றத்தை தடுக்க நடத்தப்பட்டதாக குறிப்பிட்டு, தீவிரவாத தாக்குதலை ஆதரித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃபிரேசர் ஆன்னிங் ட்வீட் செய்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கோம் டர்ன்பல் உட்பட பல்வேறு பிரமுகர்கள் இந்த ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று, செய்தியாளர்களைச் சந்தித்து ஃப்ரேசர் ஆன்னிங் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இளைஞர் ஒருவர் எழுந்து, ஆன்னிங்கின் தீவிரவாத ஆதரவு போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து,அவர் மீது முட்டையை வீசி தாக்கினார்.

ஆன்னிங்கும் அந்த இளைஞரின் தலையில் அடித்தார். அதில் இளைஞர் கீழே விழுந்தார். உடனே விரைந்து வந்த போலீஸார், அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.