லண்டன்: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 179 ரன்கள் மட்டுமே எடுக்க, பதிலுக்கு இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எடுத்து வலுவான முன்னிலையைப் பெறும் என்று எதிர்பார்த்தால், வெறும் 67 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்துக்கொண்டது அந்த அணி.

அந்த அணி மொத்தம் விளையாடியதே 27.5 ஓவர்கள்தான். ஆஸ்திரேலியாவின் ஹேஸ்ல்வுட் 5 விக்கெட்டுகள், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் மற்றம் பேட்டிசன் 2 விக்கெட்டுகள் எடுத்து தங்களுக்குள் கணக்கைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா, 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்துள்ளது. ஸ்மித்திற்கு பதிலாக களமிறங்கிய மேமஸ் லபுஷானே தனது பங்கை சிறப்பாக செய்துவருகிறார்.

முதல் இன்னிங்ஸிலூ 74 ரன்களை அடித்த அவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் 53 ரன்களை அடித்து இன்னும் ஆடி வருகிறார். போனமுறை 61 ரன்கள் அடித்த டேவிட் வார்னர் இந்தமுறை டக் அவுட்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆர்ச்சருக்கு இதுவரை விக்கெட் கிடைக்கவில்லை. ஆக மொத்தத்தில், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைவிட மொத்தமாக 283 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், ரசிகர்கள் காலாகாலத்தில் மைதானத்தை விட்டு புறப்பட்டு வீடுகளுக்குப் போய் வேறுவேலையை பார்க்கும் நிலையே ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.