கான்பெரா

டந்த 18 மாதங்களாக கொரோனா பரவலால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியா நீக்க உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம்  தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.    இதையொட்டி ஆஸ்திரேலியாவுக்குள் வரவும் அங்கிருந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.  பல ஆஸ்திரேலிய மக்கள் தங்களை நாட்டை விட்டுச் செல்ல விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை விடுத்தனர்.

அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் ஒரு சில இடங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  மேலும்  எல்லை தாண்டி சுற்றுலா செல்ல முழு தடை விதிக்கப்பட்டது.   இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் நோய்வாய்ப்பட்ட உறவினர்கள், இறந்தவர்களின் ஈமச்சடங்குகள், திருமணங்கள், மக்கட்பேறு ஆகியவற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆஸ்திரேலியாவில் வேகமாக நடந்து வருகிறது.  இதில் முதன்முதலாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் 80% தடுப்பூசி போடப்பட்ட மாகாணம் ஆனது.  இதையொட்டி அடுத்த மாதம் அதாவது நவம்பர் முதல் பயணத்தடை முழுமையாக விலக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சிட்னி நகரைச் சேர்ந்த காண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம் நவம்பர் 14 முதல் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விமானச் சேவைகள் தொடங்கும் என அறிவித்துள்ளது.   அதே வேளையில் மற்ற நாட்டவர் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுவது எப்போது என்பது தெரிவிக்கப்படவில்லை.