சிட்னி:
ஸ்திரேலிய டி20 அணிக்கு இந்தியாவின் தோனி, ஹர்திக் பாண்டியா போன்ற பிரமாதமான பினிஷர்கள் தேவை என்று முன்னாள் கேப்டனும் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

50 ஓவர் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை 5 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 1987, 1999, 2003, 2007, 2015 என்று 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் இதுவரை 2007 முதல் தொடங்கிய டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா ஒருமுறை கூட வென்றதில்லை.

2010-ல் பைனல் வரை முன்னேறியதோடு சரி. இந்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்தப்படுவதாக உள்ளது. கொரோனா பரவலால் இது குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய டி20 அணி பற்றி கூறியதாவது:

ஆஸ்திரேலிய டி20 அணியில் முன் வரிசை வீரர்கள் நன்றாக உள்ளனர், கவலையளிக்கக் கூடியது பின் வரிசை பேட்டிங்தான். ஏனெனில் இன்றைய டி20 ஆட்டங்களில் கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் எடுப்பதுதான் சிறந்தது, அப்படி வெளுத்து வாங்கும் வீரர்கள் பின் வரிசையில் ஆஸ்திரேலிய அணியில் இல்லை.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன் வாழ்நாள் முழுதும் பின் வரிசையில் இறங்கினார், தானே பினிஷ் செய்தார், அல்லது மற்ற வீரர்கள் பினிஷ் செய்யுமாறு ஒரு முனையில் இன்னிங்சை வழிநடத்தினார். தோனி சிறந்த பினிஷர் என்பதை மறுக்க முடியாது.

அதே போல் ஹர்திக் பாண்டியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் கெய்ரன் பொலார்ட் போன்றோரும் பின் வரிசையில் அதிரடியாக ஆடுகின்றனர்.

எனவே இவர்களைப் போன்ற பினிஷர்கள் ஆஸ்திரேலிய அணிக்குத் தேவைப்படுகின்றது.

பின் வரிசையில் அதிரடி வீரர்கள் காணாமல் போனதற்குக் காரணம் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் முன் வரிசையில் மட்டுமே களமிறங்குகின்றனர். இவர்களில் ஓரிருவர் பின்னால் இறங்கி அதிரடி ஆட்டம் ஆட முயற்சிக்க வேண்டும்.

அந்த வகையில் கிளென் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மிட்செல் மார்ஷ் போன்றோரை பின் கள வீரர்களாக, அதிரடி ஆட்ட வீரர்களாக உருவாக்கினால் ஆஸ்திரேலிய டி20 அணி பலம் பெறும்.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்