அடிலெய்டு: முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாளின் இரண்டாவது செஷனிலேயே முடிவடைந்த ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை எளிதாக வென்றது ஆஸ்திரேலியா.

முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்ற இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக மோசமாக, வெறும் 36 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது உலகப்புகழ் பெற்ற இந்திய பேட்டிங் வரிசை.

கடைசியாக, ஆஸ்திரேலியா வெற்றிபெற வெறும் 90 ரன்கள் இலக்கானது. சரி, ஆஸ்திரேலியாவை இந்தியா பெரியளவில் மிரட்டும் என்று பார்த்தால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

எந்தப் பதற்றமுமில்லாமல் இந்தியாவை ஊதித்தள்ளியது ஆஸ்திரேலியா. மேத்யூ வேட் 33 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆக, ஜோ பர்ன்ஸ் 51 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். 6 ரன்கள் எடுத்த மார்னஸ் லபுஷேனை அஸ்வின் அவுட்டாக்கினார்.

இறுதியில், 21 ஓவர்களிலேயே, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 93 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ஈட்டியது ஆஸ்திரேலியா.

இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது.