கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் இந்த மாதம் 7 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

ஜனவரி 28 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் விளையாட தரவரிசை பட்டியலில் இடம்பெறாத வீரர்களுக்கு நடைபெற்ற தகுதிச் சுற்று மூலம் வெற்றிபெற்ற இந்திய வீரர் சுமித் நாகல் இடம்பிடித்தார்.

உலக தரவரிசை பட்டியலில் 27 வது இடத்தில் உள்ள கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் பப்லிக் உடன் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சுமித் நாகல் மோதினார்.

2021ம் ஆண்டு ஆஸி ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிய சுமித் நாகல் இந்த முறையும் தோல்வியை தழுவுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் பப்லிக்கை வென்று அதிர்ச்சியளித்தார்.

இதன் மூலம் தரவரிசை பட்டியலில் இல்லாத ஒருவர் தரவரிசையில் உலகின் முன்னணி வீரர் ஒருவரை தோற்கடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

முதல் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் சுமார் 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை பெற்றுள்ள சுமித் நாகல் ஒரு கட்டத்தில் தனது வங்கிக்கணக்கில் 81,000 ரூபாய் மட்டுமே இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ள 26 வயதான இந்திய வீரர் சுமித் நாகல் 1989ல் ஆஸ்திரேலிய ஒபனில் இரண்டாம் சுற்றில் அப்போதைய உலகின் நம்பர் 1 வீரர் மேட்ஸ் விலாண்டரை வீழ்த்திய ரமேஷ் கிருஷ்ணனின் சாதனையை 35 ஆண்டுகளுக்குப் பின் சமன் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.