சென்னை: ஆகஸ்டு  7ந்தேதி தேசிய கைத்தறி தினத்தன்று,  வீடுகளில் கருப்புகொடி ஏற்றப்படும் என்றும், அன்றைய தினம் அரசுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

காஞ்சிபுரம் என்றாலே நமக்கு நெசவுத் தொழிலும் பட்டுப்புடவையும்தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் கைத்தறி மூலமாக நெய்யப்படும் பட்டுப்புடவைகள் இங்கு மிகவும் புகழ் பெற்றவை ஆகும். காஞ்சிபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டுறவு பட்டு நெசவுச் சங்கங்களின் விற்பனையகங்கள் இருக்கின்றன. தொழில்கள் இயந்திரமயமாவதற்கு முன் துணி உற்பத்தி கைத்தறி மூலமாகவே நடைபெற்றது.  கைத்தறி கணக்கெடுப்பு 2019-20 இன்படி இந்தியாவில் 26 லட்சத்து 73 ஆயிரத்து 891 நெசவாளர்களும் அதன் துணை தொழில்களில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 621 தொழிலாளர்களும் என மொத்தமாக 35 லட்சத்து 22 ஆயிரத்து 512 பேர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அளவில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களில் 72% பேர் பெண்கள் தான்.

தமிழ்நாட்டில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 574 கைத்தறி நெசவுத் தொழிலாளர்களும் புதுச்சேரியில் 1999 கைத்தறி நெசவுத் தொழிலாளர்களும் உள்ளனர். இவற்றில் பெரும்பாலோர் கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அமைப்பு சாராத கைத்தறி தொழிலாளர்களும் உபரியாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டில் 67% கைத்தறி நெசவாளர்கள் மாத வருமானம் ரூபாய் ஐயாயிரத்திற்கும் குறைவாகவே பெறுகின்றனர். 26% நெசவாளர்கள் மாத வருமானமாக ரூபாய் ஐயாயிரத்துக்கு மேல் ஆனால் ரூபாய் பத்தாயிரத்துக்கும்கீழ் என்று பெறுகின்றனர். அதாவது 93% கைத்தறி நெசவாளர்களின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரத்துக்குள்தான் இருக்கின்றது. இவர்களுக்கு வருமானம் குறைந்தால் வறுமைதான் வாழ்க்கையாகிவிடும். இதனால், கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு கைத்தறி நெசவாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதில் மாநில அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த சூழலில்,  கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்யக் கோரி கைத்தறி நெசவாளர்கள் போராட்டடம் அறிவித்து உள்ளது.  காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பட்டு மற்றும்  பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்யக் கோரி கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு அதை தடுப்பதற்கான முயற்சிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. இதன் அடுத்த கட்ட முயற்சியாக வரும் 7 தேசிய கைத்தறி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர்கள் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நாளில் காலையில் காஞ்சிபுரத்தில் சங்க அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.