நியூஸ்பாண்ட்

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்:

ன்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், சற்றுமுன் அவரது வீட்டுக்கு துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி வந்ததாகவும் இருவரும் முக்கிய வியங்கள் குறித்து கலந்தாலோசித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அரசியலுக்கு வருவது குறித்து தீர்மானமாக அறிவிக்காமல் பல வருடங்கள் இருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த (2017ம்) வருடம் டிசம்பர் 31ம் தேதி, புதிய கட்சி துவக்கப்போவதாக அறிவித்தார்.

தனது ரசிகர் மன்றத்தின் பெயரை, மக்கள் மன்றம் என்று மாற்றிய அவர் ஏராளமான உறுப்பினர்களை சேர்க்கும்படி மன்றத்தினருக்கு உத்தரவிட்டார். மேலும், அரசியல் நிகழ்வுகள் குறித்து மன்றத்தினர் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

ரஜினியின் உத்தரவை ஏற்று உறுப்பினர் சேர்க்கையில் இறங்கிய மன்றத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றும், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ரஜினியின் கருத்து என்ன, அவரது கொள்கை என்ன என்று மக்கள் கேட்டு மன்றத்தினரை திருப்பி அனுப்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. (இடையில் கொள்கை குறித்த செய்தியாளரின் கேள்வியைக் கேட்ட ரஜினி “தலைசுத்திடுச்சு” என்று தெரிவித்தது குறிப்படத்தக்கது.)

எதிர்பார்த்த அளவு உறுப்பினர்களை சேர்க்க முடியாததால், ஏப்ரல் மாதம் கட்சியின் பெயரை அறிவிக்க இருந்தததை ரஜினி ஒத்தி வைத்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே இன்று இரவு ரஜினி அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சோதனைக்காகவும் ஓய்வெடுக்கவும் அமெரிக்கா செல்லும் ரஜினி, காலா பட வெளியீட்டுக்குப் பிறகு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

குருமூர்த்தி- ரஜினி

இந்த நிலையில் இன்று முற்பகல் ரஜினியின் போயஸ்கார்டன் இல்லத்துக்கு துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்ததி வந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், “ரஜினிக்கு அரசியல் ஆலோசனை கூறுபவர்களில் முக்கியமானவரான குருமூர்த்தி இன்று ரஜினி வீட்டுக்கு வந்து அவரிடம் கலந்துரையாடினார். ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் செய்யவேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அது ரசிகர்களிடையே வரவேற்பை பெறும். ஆகவே அப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அரசியல் கட்சி பெயரை வெளியிடலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களை சந்திப்பதா, அப்படி சந்தித்தால் எப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அவற்றுக்கு எப்படி பதில் அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது” என்று கூறப்படுகிறது.