திருச்சி:
தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் திருச்சியில் பிரபலமான இனாம் குளத்துர் பிரியாணி ஓட்டல் அதிபர் ஆடி காருடன் சிக்கினார்.
திருச்சி:
தஞ்சை அருகே ஒரத்தநாடு செம்மண்கோட்டை திருவோணம் பிரிவு சாலை அருகே ரகசியமான முறையில் பணபரிமாற்றம் செய்யப்படுவதாக நேற்றிரவு ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த நேரத்தில் மற்றொரு கார் வேகமாக புறப்பட்டு சென்றது. உடனே போலீசார் அந்த காரை பின் தொடர்ந்தனர். அந்த கார் ஒரத்தநாடு பஸ்நிலையம் பெரியார் சிலை அருகே நின்றது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் பைகளில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.34 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து காரில் வந்த 5 பேரையும், பணத்துடன், காரையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதில் அவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதில் சிக்கிய பீர் முகமது என்பவர் திருச்சி அருகே பிரபலமான இனாம்குளத்தூரில் உள்ள பிரியாணி கடையின் உரிமையாளர். அவர் திருச்சியிலும் 2 ஓட்டல்கள் நடத்தி வருகிறார். இவருடன் அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளரான கேசவன் உள்பட 4 பேர் பிடிபட்டனர்.
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கரம்பியம் பகுதியில் நிலம் வாங்க பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். எனினும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.