சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் இவ்வாண்டு ஹஜ் பயணத்திற்கு தகுதியற்றவராவர் என்று இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு விடுத்திருக்கும் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு வருகிற 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் அறிவிப்பின் அடிப்படையில் இந்திய ஹஜ் குழு வெளியிட்ட சுற்றுலா அணையில் ஹஜ் 2022 பயணம் மேற்கொள்ள புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 22ஆம் தேதி வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
ஹஜ் பயணம் செல்ல 22-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: ஆனால் பயணிகள் இதை பின்பற்ற வேண்டும்.. வரும் 22ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப் பட்டு குறைந்தது வரும் டிசம்பர் 31 வரை செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்க பன்னாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் வருகிற ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னர் 65 வயது பூர்த்தியடையாத சவுதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19, பி.சி.ஆர். பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவச்சான்று உடையவர்கள்.
வயது தகுதியின்மை ( 65 வயதை கடந்தவர்கள்) காரணத்தால் பெண் பயணிக்கு மெஹ்ரமாக ஏற்கனவே விண்ணப்பித்த இடத்துக்கு புதிதாக ஆண் வழித்துணையாக விண்ணப்பிக்கலாம். கிரியைகளை நிறைவேற்றும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டும். தற்போது சவுதி அரசால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க விரும்பாதவர்கள் ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்களை திரும்பப் பெறலாம். மேலும் ரமலான் மாதத்தில் உம்ரா ஏற்பாடு மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு சவுதி அரசாங்கம் சுகாதாரம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், பெண் பயணிக்கு வழித்துணையாக விண்ணப்பித்த 65 வயதைக் கடந்த ஆண்களும் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹஜ் கடமைகளை நிறைவேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவச் சான்று உடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.