சென்னை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம்  பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. 2வது மாணவனை கண்டித்த ஆசிரியர் பரத் மீது தாக்குதல் நடத்திய சிவலிங்கம், அவரது மனைவி செல்வி மற்றும் அவரது தந்தை முனியசாமி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திமுக ஆட்சி பதவிக்கு  வந்தபிறகு ஆசிரியர்கள்மீதான தாக்குதல்களும், மாணாக்கர்களின் அட்டூழியங்களும் அதிகரித்து வருவதாக ஆசிரியர்களும், கல்வியாளர் களும் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறினால் மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆசிரியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் செல்வி. செல்விக்கு திருமணம் ஆகி அவரது கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார். சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு பிரகதீஸ் (வயது 7) என்ற மகன் உள்ளான். பிரகதீஸ் தனது தாத்தாவான முனியசாமி உடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் பிரகதீஸ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்தப் பள்ளியில் வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள் (60) தலைமை ஆசிரியராகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. மெதுவாக விளையாடும்படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து முனியசாமி அவசர போலீஸ் எண் 100 அழைத்து புகார் செய்துள்ளார். இதை எடுத்து போலீசார் இன்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் அவரது மனைவி செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர் எப்படி பையனை அடிக்கலாம் என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி ஆசிரியர் பாரத்தை அவ்வறாக பேசியது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுக்கும் நோக்கில் பேசியுள்ளனர். ஆசிரியரை தாக்கியவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் நம்பிபுரத்தில் ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். தாக்குதல் சம்பவம் தொடராதிருக்க ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன்,  இணைப் பொதுச்செயலாளர், AIPTF. பொதுச் செயலாளர், WTTF ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் நம்பிபுரம் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவை பார்க்கும் போது மனிதநேயமே இல்லாமல் வன்முறை குணத்தோடு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது தெரிகிறது. அடுத்தவர் வீட்டு குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகளாக நினைத்து கல்வி போதித்து, நல்லொழுக்கம் கற்றுத் தரும் ஆசிரியர்களை தாக்குவதற்கு எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லை. எந்த நிலையிலும் இந்த வன்முறை தாக்குதல் சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்திருப்பதாக தெரிகிறது. உடனடியாக மீதமுள்ள நபரையும் கைது செய்ய வேண்டும். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது போன்ற ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முற்றிலுமாக நீக்கிடும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராமப்புற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் எளியவர்கள் என்ற கருத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற செயல்கள் இனி மேலும் தொடராத வகையில் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களிலிருந்து ஆசிரியர்களை காப்பாற்றும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டுமென *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த வன்முறை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தாவது, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு ஆசிரியர்கள் நலன், கல்வி நலன் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என வலியுறுத்தி உள்ளனர்.

ஆசிரியர்கள்மீதான தாக்குதல்களுக்கு ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.  இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும், கல்வியாளர்களும், திராவிட ஆட்சியில் ஆசிரியர்களுக்கு இருக்கும் மதிப்பு இவ்வளவுதான் என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தாய் தந்தைக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஆசிரியர் எனப்படும் குரு. ஆனால், சமீப காலமாக ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களும், மாணவர்களை கண்டிக்கும் ஆசியர்களின் உடமைகள் நாசமாக்கப்படுவதும், மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்கள் மிரட்டப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. இது கிராமங்களில் மட்டுமல்ல, சென்னை போன்ற பெருநகரங்களிலும் தொடர்கின்றன.  இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய கல்வித்துறையும், காவல்துறையும், அதை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழ்நாட்டிற்கு சாபக்கேடாக உள்ளது.

ஆசிரியராய் இருப்பதே இனி ஆபத்து தான் என்ற மனநிலைக்கு ஒவ்வொரு ஆசிரியர்களும் வரும் நிலை உருவாகி உள்ளது. அரசின் மெத்தனத்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. எந்த தைரியத்துல ஆசிரியர் மீது கைய வைக்குறான்க? என்று தெரியவில்லை,.  இப்படி இருந்தால் ஆசிரியரின் நிலை மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்க்காலம்? என்னவாகும் என சிந்திக்கும் மனநிலையில், தமிழர்கள் இல்லை, திராவிட ஆட்சியில் பொதுமக்கள் மாட்டு மந்தைகளாக மாறிவருவார்களோ என்ற எண்ணத்தையே உருவாக்கி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் திறமையாக அமல்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்,  சிபிஎஸ்இக்கு இணையாக கொண்டு வரப்பட்டது. தற்போது அதே பாடத்திட்டங்கள் தொடர்ந்தாலும், அதுதொடர்பாக  பல்வேறு அறிப்புகள், திருத்தங்கள்  என்ற பெயரில் அது பாழாக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் கல்வியாளர்கள்,  மாணவர்கள் படிப்பதை தவிர மற்ற அனைத்தும் ஆர்வம்  காட்ட அரசு சொல்கிறது. அப்படியென்றால், அவர்களுக்கு படிப்பை சொல்லி கொடுப்பது யார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, அரசு பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்கும் திமுக அரசு, அந்த மாணவர்கள் அமர்ந்து படிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது இல்லை என்றும், போதுமான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவது இல்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திமுக ஆட்சி பதவிக்கு வந்த பிறகு ஆசிரியர்கள்மீதான தாக்குதல்களும், மாணாக்கர்களின் அட்டூழியங்களும் அதிகரித்து வருவதாக ஆசிரியர்களும், கல்வியாளர் களும் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறினால் மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆசிரியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இந்த விவகாரம் பூதாகாரமாக மாறிய நிலையில், ஆசிரியர் பரத் மீது தாக்குதல் நடத்திய சிவலிங்கம், அவரது மனைவி செல்வி மற்றும் அவரது தந்தை முனியசாமி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.