மதுரை: மதுரை மாநகராட்சியின் துணை மேயர் வீடு, அலுவலகங்களில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இநத் தாக்குதலில் ஈடுபட்டதாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி துணை மேயராக திமுகவின் கூட்டணி கட்சியாகன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் இருந்து வருகிறார். மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது. திமுகவின் இந்திராணி மேயராக உள்ளார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரான நாகராஜன் துணை மேயராக செயல்பட்டு வருகிறார். மாநகராட்சி பணிகள் தொடர்பாக மேயருக்கும், துணைமேயருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துணைமேயர் நாகராஜ் வசித்து ஜெய்ஹிந்த் புரம் வீட்டில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை நாகராஜன் தனது மனைவி செல்வராணி யுடன் வீட்டில் இருந்தார். அப்போது, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நாகராஜனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை எம்.பி. வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, குற்றவாளிகளை உடனே கைத செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், துணைமேயர் வீட்டின்மீது, தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன என காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், அவர்களின் பின்னணி என்ன? அவர்கள் எதற்காக துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய விபரங்களை போலீசார் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து விரைந்து வந்த மதுரை போலீசார் விரைந்து வந்து துணை மேயர் நாகராஜனின் வீடு, அலுவலகத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் நாகராஜன் சார்பில் வழங்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள், யார், எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என கூற காவல்துறையினர் மறுத்து விட்டனர். ஆனால், அவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் முழுநேரத் தொண்டரான லீலாவதி, திமுகவை எதிர்த்துஅரசியல் செய்து வந்த நிலையில், 1997ம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று பட்டப்பகலில், தன் கணவருடன் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்றிருந்தார் லீலாவதி. உடன் வந்திருந்த லீலாவதியின் கணவர் குப்புசாமி கட்சித் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வெட்ட வருவதைக் கண்ட லீலாவதி தடுக்கும் நோக்கில், கையை உயர்த்த கைவிரல்கள் துண்டாகிக் கீழே விழுந்தன. தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை வெட்டிச் சாய்த்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் லீலாவதி. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது திமுகவினர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.