சென்னை:  தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, வழங்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து ரேசன் அட்டை கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி,  சர்க்கரை, கரும்பு  ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து, இன்றுமுதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.  இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வழக்கமான விடுமுறை நாளான வரும் 12ம் தேதியும், ரேஷன் கடை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயனாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று, சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கும் பணியை, முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் தொடங்கி வைத்தார். 5 பயனர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்ட பயனாளர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.