டில்லி,
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட ரூபாய் நோட்டுச் சிக்கல் இன்னும் தீர்ந்த பாடில்லை.
டெல்லி, மும்பை, சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
மார்ச் 31 ஆண்டுக் கணக்கு முடிவு என்பதால், அடுத்த நாளில் இருந்தே ஏடிஎம்களில் பணம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்பு இல்லாததே இந்த நெருக்கடி தொடர்வதற்கு காரணம் என்கின்றனர் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர்.
சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள பல ஏடிஎம்களில் கடந்த ஒருவாரமாகவே பணம் இல்லாததால், மாதாந்திர சம்பளம் வாங்கும் எளிய மக்கள் செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடை நீக்கிய நிலையில், விநியோகத்திற்கு போதிய ரூபாய் நோட்டுகள் இல்லாததே இந்த நெருக்கடிக்குக் காரணம் என வங்கி ஊழியர்கள் சிலர் கூறுகின்றனர்.
மற்றொரு பக்கம், மின்னணுப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்காகவும், மக்கள் மத்தியில் அதனைப் பழக்கப்படுத்துவதற்காகவுமே மத்திய அரசு செயற்கையான இந்த நெருக்கடியை நீடிக்கச் செய்வதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து, ரிசர்வ் வங்கி, நிதியமைச்சகம், மத்திய அரசு என யாரும் வாய் திறக்காத தால், சிக்கல் எப்போது தீரும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் மட்டும் கிடைக்கவில்லை.