காஞ்சிபுரம்

போதிய அளவு கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கடும் துயரமடைந்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில்  இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி தரும் அத்திவரதர் தரிசன விழா தற்போது நடந்து வருகிறது. விரைவில் இந்த விழா முடிவடைய உள்ளதால் தற்போது எக்கச்சக்கமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர். நேற்று மட்டும் மாலை 7 மணி வரை 2.85 லட்சம் பெர் தரிசனம்செய்ஹ்டுள்ள நிலையில் நள்ளிரவு வரை மேலும் 75000 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த அத்திவரதர் தரிசனம் நடக்கும் அருள்மிகு தேவராஜசாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் வெயில் மற்றும் மழைக்கு நிழல் அளிக்க ஒரு கூரை கூட அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளும் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் அதிகம் துயருறுகின்றனர். அவர்கள் கழிவறைக்காக அங்குள்ள வீடுகளில் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில பொதுமக்கள் தங்கள் செலவில் குடிநீர் அளிக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி அத்திவரதர் தரிசனம் தொடங்கியது. அது முதல் இதுவரை சுமார் 62 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சீக்கிரம் அத்திவரதர் தரிசனம்  செய்ய உதவுவதாகப் புகார்கள் எழுந்தன. அதையொட்டி மாவட்ட ஆட்சியர் பொன்னையா பிரமுகர்கள் தரிசன நுழைவாயிலில் திடீர் சோதனை நடத்தியுள்ளார்.

அந்த சோதனையிலொரு காவல்துறை ஆய்வாளர் அழைத்துச் சென்ற சிலரிடம் அவர்களது அனுமதிச் சீட்டை ஆட்சியர் கேட்டுள்ளார். அவர்கள் அனுமதிச்சீட்டு இல்லாமல் ஆய்வாளரால் பிரமுகர்கள் நுழைவாயில் மூலம் அழைத்துச் செல்வது தெரிய வந்தது. இதையொட்டி ஆய்வாளரை ஆட்சியர் கடிந்துக் கொண்ட வீடியோ பலராலும்  பரப்பப்பட்டு வைரலாகி உள்ளது.

ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் வாய் மொழி உத்தரவு அளித்துள்ளார். ஆனால் இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும்  எடுக்காமல் உள்ளனர். அதிகாரிகளில் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அல்லது மற்றவர்கள் எழுத்து மூலமக புகார் அளித்தால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.