காஞ்சிபுரம்:

40ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்க அருளாசி வழங்கும் அத்திவரதர் வைபவம் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் அனந்தரசஸ் குளத்திற்குள் அனந்த சயனத்திற்கு சென்றார்.

இதையடுத்து அடுத்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின், அதாவது வரும்  2059-ம் ஆண்டில் மீண்டும் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலிப்பார்.

அனந்தசரஸ் குளத்தில் அனந்த சயனத்தில் உள்ள அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிமூலவரான அத்திவரதர் சிலை அங்குள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள தனி நீரடி மண்டபத்தில் தண்ணீருக்குள்தான் இருப்பது ஐதிகம்.  40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீரை விட்டு வெளியே எழுந்தருளி 48 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.

இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த அத்திவரதர்  31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்டு 1ந்தேதி முதல்  17 நாட்கள் நின்ற கோலத்திலும் அருளாசி வழங்கி வந்தார்.

கடந்த 47 நாட்களில் அத்திவரதரை 1 கோடியே 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், நேற்று முதினம்  இறுதி நாளில் மட்டும் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதையடுத்து கடைசி நாளான நேற்று  அத்திவரதர் வசந்தமண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் குளத்திற்கு எழுந்தருளச் செய்ய உள்ளதற்காக யாகம் நடத்தப்பட்டது.

இதன் பின்னர் அத்திவரதர் சிலைக்கு 3 முறை தைலக்காப்பு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின், இரவு 9 மணிக்கு அத்திவரதரை, கோவிலுக்குள் உள்ள அனந்தசரஸ் குளத்திற்கு எழுந்தருளச் செய்யும் பணி தொடங்கியது.

அனந்தசரஸ் குளத்தில்  அத்திவரதர் (தண்ணீர் நிரப்பப்படுவதற்கு முன்பு)

இந்த நிகழ்ச்சியில் 80 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். வசந்த மண்டபத்தில் இருந்து 100 அடி தூரத்தில் உள்ள இயற்கையான நீருற்றை கொண்டுள் அனந்த சரஸ் குளத்தில் உள்ள நீரடி மண்டபத்திற்குள்  நள்ளிரவு 12.10 மணிக்கு அத்திவரதரை சயனக் கோலத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. அத்திவரதர் சனய கோலத்தில் நீரடி மண்டபத்தில் வைக்கப்பட்டு, சுற்றிலும் 20 நாகர் சிலைகள் வைக்கப்பட்டபின் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

அத்திவரதர் ஜலசயனம் செய்யும் குளத்துக்கு 2 மாதங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் தரிசனத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றுவது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா  தெரிவித்து உள்ளார்.

அனந்தசரஸ் குளத்திற்கு எடுத்துச்செல்லப்படும் அத்திவரதர் வீடியோ….