கொட்டும் மழையில் பாஜக நிர்வாகி வீடு முன்பு மனைவி தர்ணா

Must read

சிலிகுரி

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகியின் மனைவி கொட்டும் மழையில் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா செய்துள்ளார்.

சுமார் 3 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் சஞ்சீவ் கோஷ் மற்றும் ஸ்வேதா கோஷ் ஆகியோருக்கு திருமணம் நடந்தது.  இருவரும் சிலிகுரியில் வசித்து வருகின்றனர்.  இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக சஞ்சீவ் கோஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் ஸ்வேதாவை வீட்டை விட்டு வெளியேற்றினர்.

ஸ்வேதா தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.  சமாதான பேச்சுக்கள் முறிவடைந்ததால் அவர் நேற்று கணவர் வீட்டின் முன்பு கொட்டும் மழையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார்.  இதையொட்டி அங்கு வந்த காவல்துறையினர் ஸ்வேதா கோஷிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி சுமார் 5 மணி நேரம் கழித்து அவர் போராட்டத்தை கை விட்டார்.

ஸ்வேதா தனது போராட்டம் குறித்து, “எனது கணவர் என்னை திருமணத்துக்குப் பிறகு பல வழிகளில் துன்புறுத்தினார்.  தனது குடும்பத்தினரை மட்டுமே அவர் விரும்புகிறார்.  ஆனால் நான் அவருடைய வீட்டில் தான் வாழ்வேன்.  இந்த இடத்தை விட்டு நான் செல்ல மாட்டேன்” எனக் கூறி உள்ளார்.

சஞ்சீவ் கோஷ் இது குறித்து, “இந்த திருமணத்தால் மனதளவில் கடும் சித்திரவதையை அனுபவித்து வருகிறேன்.  ஸ்வேதா என் மீது பல வழக்குகளைத் தொடுத்துள்ளார்.   நான் அவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு செய்துள்ளேன்.  நான் ஒரு போதும் அவரை எனது வீட்டில் நுழைய அனுமதிக்கவே மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article