ஜெய்ப்பூர்,

இந்து புராண, இதிகாசங்கள் மூலம் வங்கி நிர்வாகவியல் பாடங்களை நடத்த ராஜஸ்தான் பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. தற்போது வங்கியியல், நிதியியல், நிர்வாகவியல் போன்ற படிப்புகளில் வெளிநாட்டினர் வகுத்துக் கொடுத்துள்ள பாடத்திட்டங்கள்தான் அமலில் உள்ளன.

இந்தப்பாடத்திட்டங்களை அப்புறப்படுத்தியிருக்கும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்தில் கீதாஞ்சலி, மஹாபாரதம், உபநிடதங்கள், வேதங்கள், ராமாயணம் போன்ற இதிகாச புராணங்களும்,  சுவாமி விவேகாநந்தர்,  ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ மஹாவீர், மஹாத்மா காந்தி முதலானோரின் வாழ்க்கை குறிப்புகளும்,  பணிச்சுமையைக் குறைக்க யோகா போன்ற கலைகளும் வணிகவியல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இவை வணிகவியல் முதுகலை மாணவர்களுக்கு முக்கியப்பாடத்திட்டங்களாக புகுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நவீன் மாத்தூர்,  இந்திய வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் தத்துவங்கள் நிர்வாகத்திறனை மேம்படுத்தக்கூடியவை.  இவற்றை மாணவர்கள் ஆழமாக கற்கும் போதுதான் இந்தியாவின் மதிப்பு அதிகரிக்கும் என்றார்.

ராபர்ட் ஓவன், ஜேம்ஸ் பெர்ன்காம், மேரி பார்க்கர், ஆலிவர் ஷெல்டன் முதலானோர் வணிகவியல், நிர்வாகவியல் குறித்து எழுதிய நூல்கள்தான் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  ஆனால் நமது நிர்வாகவியல் ஆற்றல் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. அதில் சில திருத்தங்களை மட்டும் செய்தால் போதும் என்றார்.

மதச்சார்பற்ற நாட்டில் மதஅடிப்படையிலான பாடங்களை திணிப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.