டில்லி
நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.
வருடா வருடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் ஆயினும், இன்று சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி உரையாடியது நாடாளுமன்றத்தில் கவனம் பெற்றுள்ளது. சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து அப்போது பிரதமர் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 18ஆம் தேதி இரவு சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சென்ற விமானம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள. புகைப்படத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் முக கவசம் ஒன்றை அணிந்தபடி காணப்படுகிறார்.
பதிவின் தலைப்பில், கருணையின் வடிவம் அழுத்தத்தின் கீழ் உள்ளது தாயே என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் மக்களவையில் பிரதமர் மோடி, சோனியாவின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்குச் சற்று முன்பு இந்த சுருக்கமான உரையாடல் நடைபெற்றது. மக்களவை தொடங்கியவுடன், சோனியா காந்தியிடம் சென்று அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். அதற்குச் சோனியா காந்தி, “நான் நலமாக இருக்கிறேன்” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரதமரிடம் சோனியா காந்தி வலியுறுத்தியதாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.