கீழடி
தமிழகத்தில் உள்ள கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் உறைக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல சமயங்களில் கிணற்றில் சுற்றியுள்ள மண் சரிவால் கிணறு மூடப்படும் நிலை நேரிட வாய்ப்புண்டு. தற்போது இதற்காக கிணற்று உறை எனப்படும் சிமிண்ட் வளையங்கள் பயன்படுத்தப் படுகின்றன. கிணற்றின் சுவற்றில் இவை பொருத்தப்படுவதால் மண் துகள்கள் கிணற்றினுள் விழுவது தடுக்கப்படும். இவ்வாறு உறை பொருத்தப்பட்ட கிணறுகள் உறைக்கிணறு என அழைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தமிழகத்தின் தொன்மை குறித்து அறிய அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஆய்வு கடந்த 45 நாட்களாக மீண்டும் நான்காம் கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 5 ஏக்கர் பரப்பளவில் 24 இடங்களில் தோண்டப்பட்டு நடைபெறும் இந்த அகழ்வாராய்ச்சியை தற்போது மாநில அகழாய்வுத் துறை நடத்தி வருகிறது.
இந்த அகழாய்வில் ஒரு உறைக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறை கிணற்றின் வளையங்கள் 1.5 அடி விட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உறைகள் சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டுள்ளன. இந்த கிணறு இருந்த இடத்தில் இதுவரை 1.5 மீட்டர் ஆழத்துக்குக் கிணறு உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கிணறு இன்னும் கீழே செல்கின்றது. எனவே இந்த இடத்தில் மேலும் தோண்டுவதன் மூலம் இந்த கிணற்றின் மொத்த ஆழம் தெரிய வரும் என கூறப்படுகிறது. வைகை ஆற்றுப்படுகைக்கு வெகு அருகில் கீழடி உள்ளதால் இந்த பகுதியில் மணல் அதிகம் இருக்கலாம் எனவும் அந்த மணல் கிணற்றில் விழாமல் இருக்க உறைகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.