ராஞ்சி

வெள்ளத்தால் மின்சாரக் கசிவு ஏற்பட்டு விஷால் குமார் வர்மா என்னும் மல்யுத்த வீரர் மரணம் அடைந்ததற்கு ஜார்கண்ட் மின் வாரியம் அது வாரியத்தின் தவறல்ல எனக் கூறியுள்ளது.

ராஞ்சியில் உள்ள ஜஸ்பால் சிங் ஸ்டேடியம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பாழடைந்த விளையாட்டு மைதானங்களில் ஒன்றாகும்.  இது 1978ல் கட்டப்பட்டது,  இங்கு ஜார்கண்ட் மாநில மல்யுத்த அசோசியேஷன் அலுவலகம் இயங்கி வருகிறது.  மழைக்காலங்களில் மைதானத்தில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.   தற்போது பெய்துள்ள மழையால் மைதானம் மேலும் குளம் போலாகி விட்டது.

விஷால் குமார் வர்மா என்னும் 25வயது மல்யுத்த வீரர் தேசிய அளவில் சாம்பியன் ஆவார்.  இவர் தற்போதைய சாம்பியன்கள் வரிசையில் நான்காவதாக உள்ளவர்.  இவர் மைதானத்தில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் பம்பு ஒன்றின் மூலம் வெளியேற்றிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துக் கொண்டிருந்ததால் தான் இந்த மரணம் நிகழ்ந்தது என இதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

போலீசார், “மோட்டார் பம்பின் வயரிங் பழுதடைந்ததாலோ அல்லது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததாலோ மரணம் நிகழ்ந்திருக்கலாம் “ எனக் கூறுகின்றனர்.   ஆனால் ஜார்கண்ட் மாநில மின் வாரியமோ, “எங்களின் அதிகாரிகளை வைத்து நாங்கள் பரிசோதனை செய்துள்ளோம்.   மின்வாரியம் சைடில் இருந்து எந்த குற்றமும் இல்லை.   ஒரு வேளை கட்டிடத்தின் உள்ளே ஏதும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு மரணம் நேர்ந்திருக்கலம் என சொல்லி சமாளித்து விட்டனர்.