ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் பற்றிய புகார் : மத்திய பா ஜ க அரசு நிராகரிப்பு

டில்லி

ராகுல் காந்தி தனக்கு அளிக்கப்பட்டுள்ள எஸ்பிஜி பாதுகாப்பு வாகனத்தால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், பல அசௌகரியங்கள் உள்ளதாகவும் அனுப்பிய புகாரை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

ராகுல் காந்திக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே.  அவருக்கு எஸ்பிஜி மூலமாக டாடா சஃபாரி வாகனம் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த வாகனம் கடந்த 2016ஆம் வருடம் ஃபிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.   இது பலவகை பாதுகாப்புக்கள் கொண்ட ஒரு கவச வாகனம் ஆகும்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாகனத்தை பற்றி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் ”ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்டுள்ள கவச வாகனத்தில் பல குறைபாடுகள் உள்ளன.  சரியான வெண்டிலேஷன் இல்லாததால் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.   அதில் இருக்கை வசதிகள் சரியாக இல்லை.   அந்த வாகனத்தின் ஜன்னல்கள் எப்போதுமே மூடிய நிலையில் இருப்பதால் யாரும் ராகுலைப் பார்க்கவோ,  ராகுல் வெளியே உள்ளவர்களைப் பார்க்கவோ கடும் சிரமமாக உள்ளது.

இந்தக் கார்கள் நெடும் தொலைவு செல்ல லாயக்கற்றவை,  இதில் அதிக நேரம் பயணம் செய்தால் புழுக்கம் காரணமாக பல்வேறு உடல்நிலை சீர்கேடுகள் ஏற்படக்கூடும்.  இது குறித்து கலந்தாலோசித்து தேவையான மாறுதல்களை செய்வது நல்லது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய பா ஜ க அரசு ராகுலின் கோரிக்கையை நிராகரித்து உள்ளது

இது குறித்து உள்துறை அமைச்சரவை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ராகுலின் புகார் நிராகரிக்கப்படுகிறது.  இதே வாகனம் பல இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.   குறிப்பாக மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி போன்றோரும் உபயோகித்து வருகின்றனர்.  இது வரை யாரும் இதைப் பற்றி எந்தக் குறையும் தெரிவிக்கவில்லை” எனக் கூறி உள்ளார்.
English Summary
Central govt rejected the complaint about Rahul gandhi's SPG armoured vehicle