சென்னை,

பிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சேலம் நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம் போனதற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் வாழ்த்து தெரிவித்து  உள்ளார்.

தமிழக வீரரான நடராஜன் யார்க்கர் பந்து வீசுவதில் திறமையானவர். ஒரு ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர் பந்துகளாக வீசுவதில் வல்லவர். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் பிரபல சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் ஒரு கிராமத்திலிருந்து வந்த நடராஜன் இன்று  வளர்ந்துள்ளார். கிரிக்கெட்டால் அவரது  வாழ்க்கை மாறியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த நாங்கள் கிரிக்கெட் விளையாட்டில் வளர்ந்துள்ளோம். அதுபோல மற்ற துறைகளிலும் நாம் வளரவேண்டும். நடராஜனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல வீரரான அஸ்வின் சக வீரரான நடராஜனை வாழ்த்தியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.