சென்னை:

ர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த பெண் ஒருவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.  தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் கடும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன என்றாலும் அதிமுகவின் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். அணிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன., இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம், கைகலப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருக்கும் இடையே  கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஓ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த உமையாள் என்ற பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அந்த பெண் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

“எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று ஓ.பி.எஸ். அணியினர் தெரிவித்துள்ளனர்.