சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 28ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அன்று முதல் வாதங்கள் தொடங்கும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி விசாரணை நடத்தப்படும் என கூறி, வழக்கை நவ.28-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்று தங்கம் தென்னரசு தரப்பு தங்களது வாதங்களைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் தங்கம் தென்னரசு. இவர் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். அந்த காலக்கட்டத்தில், வருமானத்தை மீறி ரூ. 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது, கடந்த 2012 பிப்ரவரி 14-ம் தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையானது. திமுக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்களிலும் நீதித்துறை குறித்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இதுபோன்ற வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல செயல்படுவதாகவும் விமர்சனம் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தங்கம் தென்னரசு மற்றும் அவரின் மனைவிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு நேற்று (அக்டோபர் 9ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் மேல்முறையீடு தொடர்பாக விவரங்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் அடுத்த விசாரணையின்போது, வழக்கின் வாதங்களைத் தொடங்க அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அமைச்சர் பொன்முடி வழக்கை எதிர்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி