சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானே விசாரிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது, அதிகாரத்தை காட்டி, வருமானத்துக்கு அதிகமாக 1.36 கோடி சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 2021ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வழக்கு திடீரென வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, லஞ்சு ஒழிப்புதுறையின் அறிக்கையை ஏற்று, வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய வேலூர் நீதிமன்றம் பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியது.
இதையடுத்து, பொன்முடி மீதான வழக்கில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முறையாக செயல்படவில்லை என்றும், ஆட்சியாளர்களுக்கு தகுந்தவாறு பச்சோந்திபோல தங்களது நிலையை மாற்றிக்கொள்கின்றனர் என கடுமையாக விமர்சனம் செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பொன்முடி மீதான சொத்து குவிப்பை வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது, தான் பார்த்ததிலேயே மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்குஇதுதான் என்று கூறிய நீதிபதி, இதில் குற்ற விசாரணை நடைமுறையைத் திரிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த வழக்கை வேலூருக்கு மாற்றியது, தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என்பதால், சட்டத்தின் பார்வையில் செல்லாது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி நடந்திருப்பதால், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, அமைச்சர் பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக உத்தரவின் மூலமா மாற்றப்பட்டுள்ளதால் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.
அந்த மேலும் தங்களுடைய உத்தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போல் உள்ளது நீதிபதியை விமர்சித்தார். அத்துடன், “இந்த வழக்கில் இருந்து நீங்கள் விலக வேண்டுமென கூறவில்லை. அதே நேரத்தில் சட்டப்படி தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்துத் தான் யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கின் விசாரணை 14ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதாக கூறிய நீதிபதி, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பொன்முடிக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.