சென்னை
மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்குமா என்பதற்குச் சட்டசபை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2016 இல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதனால் பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தார். விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு மூன்றாண்டு சிறை தண்டனைக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே பொன்முடி மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், அவருக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்குமா என்கிற கேள்வ் எழுந்தது.
பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை மீட்டுத்தரக் கோரி சட்டப்பேரவை செயலகம் அல்லது நீதிமன்றத்தை நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் முதல் முறையாக ஊழல் தடுப்பு வழக்கில் இதுபோன்ற நிலை உருவாகியுள்ளதாகவும் சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.