சென்னை: சட்டசபையில் கச்சத்தீவு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் பேச்சுக்கு பதில்தர  தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

23-1466663871-stalin8532-600
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஜெயலலிதா பதிலளித்து பேசினார். அப்போது அவர், “குற்ற நிகழ்வுகள் குறைந்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் குற்றநிகழ்வு குறைந்துள்ளது” என்றார்.
மேலும் அவர், “கச்சத்தீவை கொடுத்த பிறகு தான் தனக்கு தெரியும் என கருணாநிதி கூறினார். கச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கச்சத்தீவு பற்றி சட்டசபையில் பேசாமல், வெளியில் இருந்து பேசுகிறார். கேள்விகளுக்கு பயந்து திமுகவினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று  பேசினார்.
முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இதனால் ஜெயலலிதாவின் பேச்சில் இடையூறு ஏற்பட்டது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் விளக்கம் தரமுற்பட்டனர்.
சபாநாயகர் தனபால், “முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சில் இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறினார்.
சட்டசபையில் முதல்வர் பேச்சுக்கு விளக்கம் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, “கச்சத்தீவு பிரச்னையை எடுத்தாலே திமுகவினர் ஓடுகிறார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குப்போடப்போவதாக வாஜ்பாய் சொல்லியும் கருணாநிதி முன் வராதது ஏன்?
கச்சத்தீவு குறித்து பதில் அளிக்க கருணாநிதியை திமுகவினர் சட்டசபைக்கு அழைத்து வர வேண்டும். சட்டசபைக்கு வந்து அவர் விளக்கம் அளிக்கத் தயாரா?  திமுக தலைவர் யார் என்பதில் ஸ்டாலின், கருணாநிதிக்குள் குழப்பம் இருக்கிறது” என்றார்.
வெளிநடப்பு செய்த திமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வெளியே, வெளிநடப்பு செய்த காரணத்தைத் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “கச்சத்தீவு விவாகாரத்தில் திட்டமிட்டு கருணாநிதி மீது பொய்யான குற்றச்சாட்டை ஜெயலலிதா கூறுகிறார்.  ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் அந்த பொய் உண்மையாகிவிடாது.   கச்சத்தீவு பிரச்சினை பற்றி முதல்வர் முரண்பட்ட கருத்து தெரிவித்து வருகிறார். , இதற்கு பதில் அளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.  கச்சத்தீவு விவகாரத்தில் அதிமுக அரசுக்குத்தான் அக்கறையில்லை”  என்று துரைமுருகன் தெரிவித்தார்.