சென்னை:

டந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த அமளி குறித்த அறிக்கையையும், அன்றைக்கு பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் தமிழக ஆளுநர் வித்யாசாகரிடம் சட்டப்பேரவை செயலாளரிடம் அளித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில், முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் கோரினர். இதற்கு சபாநாயகர் மறுத்ததால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தான் தாக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள், காவலர்களைக் கொண்டு வெளியேற்றப்பட்டனர். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக அக் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், புகார் தெரிவித்தார்.

இதைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள், சிறிது நேரம் சாலை மறியலும், சிறிது  நேரம் உண்ணாவிரதமும் இருந்தனர். பிறகு ஆளுநரிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ் அணியினரும் ஆளுநரிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.

இந்த நிலைியில் அன்றைய நிகழ்வு குறித்து சட்டபேரவை செயலாளரிடம் ஆளுநர் அறிக்கை அளிக்குமாறு கேட்டிருந்தார். இன்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், ஆளுநரை நேரில் சந்தித்து அறிக்கை அளித்தார். மேலும் அன்றைய நிகழ்வின் வீடியோ பதிவுகளையும் அளித்தார்.

தற்போது இது குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்  என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.