500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஏமாற்று வேலை. முழு மதுவிலக்கே தீர்வு” என்று  பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும், உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர ஊர்திகள் வாங்க 50% மானியம் வழங்கப்படும், கருவுற்ற பெண்களுக்கான நிதி உதவி ரூ.18,000 ஆக உயர்த்தப்படும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிதி உதவி இரு மடங்காக உயர்த்தப்படும் ஆகியவை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவையாகும்.

எடப்பாடி பழனிச்சாமி புதிய திட்டங்களால் ஏற்படும் சாதக, பாதகங்கள் ஒருபுறமிருக்க, இத்திட்டங்கள் அனைத்துமே சசிகலாவின் பினாமி அரசு மீது தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் மற்றும் கொந்தளிப்பை சரி செய்வதற்கான முயற்சியாக பார்க்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளுக்கு எந்த இடையூறுமின்றி ஊழல் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யும் போது அதை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் கையூட்டாகவே இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகளின் நாடகங்களால் ஏமாந்து, அதன் விளைவுகளை அனுபவித்துள்ள மக்கள் இன்னும் ஒரு முறை ஏமாறத் தயாராக இல்லை.

புதிய முதமைச்சர் பதவியேற்றதையொட்டி இந்த சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் அதை ஏற்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றபோது எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அதன்பின் கடந்த மாதம் சட்டப்பேரவையில் ஆளுனர் உரையாற்றிய போது இத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்த கொள்கை அறிவிப்புகள் கூட வெளியிடப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, எடப்பாடி பழனிச்சாமி அரசு முறைகேடான வழியில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மக்களின் கோபம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதிலிருந்தே இவற்றின் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் மொத்தம் 7000 மதுக்கடைகள் இருக்கும் நிலையில், அவற்றில் 500 கடைகள் மட்டுமே கடந்த ஆண்டு ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன் மூடப்பட்டன. அப்போதே படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதையெல்லாம் செயல்படுத்தாத தமிழக அரசு, இப்போது மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவிப்பதால் பயனில்லை. இதே வேகத்தில் சென்றால் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மொத்தம் 14 ஆண்டுகள் ஆகும். அதற்குள் மதுவால் சரி செய்ய முடியாத அளவுக்கு சீரழிவுகள் ஏற்பட்டுவிடும்.

உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 2700 மதுக்கடைகளை மார்ச் 31-ஆம் தேதி மூடும் போது, அவற்றுடன் சேர்த்து மற்ற கடைகளையும் மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் சரியான தீர்வு என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர ஊர்தி வாங்க 50% மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. மகளிருக்கான இரு சக்கர ஊர்திகளின் விலை சராசரியாக ரு.50,000 என்ற அளவில் உள்ள நிலையில், அதிகபட்சமாக ரூ.20,000 மட்டுமே மானியம் வழங்கப்படும் என்பது எந்த வகையிலும் பயனளிக்காது. பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் சென்று வரும் பெண்கள் அனைவருக்கும் இரு சக்கர ஊர்தி வழங்கப்படும் என்பது தான் தேர்தல் வாக்குறுதியாகும்.

ஆனால், இப்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அதிமுகவினருக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படுவதற்கும், மானியம் வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களை அ.தி.மு.க.வினர் ஏமாற்றுவதற்கும் மட்டுமே இந்தத் திட்டம் பயன்படும். அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்திற்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்குவதாக ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்த நிலையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி இரு மடங்காக உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், ஆட்சிக்காலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதில்லை என்பதை சசிகலாவின் பினாமி அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் நிலையில், அவர்களில் 55,228 இளைஞர்களுக்கு மட்டும் இந்த உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஏற்கமுடியாது.வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் உதவி வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.

ஊழல்கள் மற்றும் இயற்கை வளக் கொள்ளைகள் மூலம் மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த அரசு, இதுபோன்ற ஏமாற்று அறிவிப்புகளின் மூலம் மக்களின் ஆதரவை பெற்று விட முடியாது. இந்த அரசின் மீதான மதிப்பீடு என்ன? என்பதை விரைவில் வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழக மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” – இவ்வாறு தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.