சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விதியை மீறி குட்கா  போதைப்பொருளை திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில், விளக்கம் அளிக்கக்கோரி  உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், உரிமை குழு நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 19.07.2017 அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த 25.08.2020 அன்று, மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 07.09.2020 அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, 19.07.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். அதோடு,  14.09.2020 அன்று தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே கூறப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி மீண்டும் உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது சரியல்ல. எனவே, இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதாடினார்.

சட்டசபை செயலாளர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘சட்டசபைக்குள் குட்கா பாக்கெட்டை காண்பிப்பதை அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் பலமுறை கூறி உள்ளார். அதையும் மீறி குட்கா பாக்கெட்டை காண்பித்து உள்ளனர். எனவே, இது உரிமை மீறல்தான். உரிமைக்குழு தனது முடிவை சபாநாயகருக்கு பரிந்துரை மட்டுமே செய்யும். சபாநாயகர் தான் முடிவெடுப்பார்’, இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று வாதிட்டடார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செப்டம்பர் 24-ந் தேதி (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, திமுக எம்எல்ஏக்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.