சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளவர்கள், அதை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 26ந்தேதி மாலை அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், பாதுகாப்பு கருதி அரசின் அனுமதியுடன் லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில், தங்களின் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, ஏற்படும் வன்முறை சம்பவங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் உரிமம் பெற்ற 2700 துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் அவற்றில் 500 துப்பாக்கிகள் வங்கிகள் போன்ற நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இதுவரை 600 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.