திருச்சி: திருச்சி அருகே மயான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஆளுங்கட்சி உறுப்பினர் உதவியுடன், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே மயான இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மல்லியம்பத்து செங்கற்சோலையை சேர்ந்த  சிவக்குமார் என்ற சோலை சிவா (வயது 50) என்ற ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் அவரது வீட்டில் வைத்து உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த  சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அந்த பகுதியில் உள்ள சுடுகாட்ட்டின் ஒரு பகுதி மற்றும் அதன் அருகே உள்ள இடத்தை நிலத்தை ஆக்கிரப்பது தொடர்பாக சிவாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்  மற்றும் சிலருக்கும் இடையே தகராறுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று மாலை 6 மணியளவில் சிவக்குமார் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரிந்த 2 நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாள் மற்றும் கடைகளுடன் கண் இமைக்கும் வேளையில் அடித்து கொன்றுபோட்டு விட்டு சென்றனர்.

 இதையடுத்து, இந்த கொலையில் தொடர்பு உடைய  திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், பிரபாகரன் என்ற மருதை ராஜ், பிரபலமான வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா  உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், அவர்கள் தலைமறைவான நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.