திஸ்புர்:  குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்காக அசாம்  மாநிலத்தில், முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ய அசாம் மாநில  முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்து உள்ளார். இதுதொடர்பான சட்ட திருத்தத்துக்கு அசாம் மாநில  அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது. இதற்கிடையில், மத்திய பொதுசிவில் சட்டத்தை, உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்ளாக அசாமிலும் இந்த சட்டத்தை கொண்டு வரும் நோக்கில், முஸ்லிம் மத சட்டங்களான திருமணம் மற்றும் விவாகரத்து  சட்டங்களை ரத்து செய்யப்பட இருப்பதாக அசாம் மாநில முதல்வர் அறிவித்து உள்ளார்.

இதுதொடா்பாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, தனது எக்ஸ் வலைதளத்தில், “ஆண் 21 வயதும் பெண் 18 வயதும் நிறைவடையாமல் திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 வழிவகுக்கிறது. எனவே அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை ஒழிக்கும் முக்கிய முன்னெடுப்பாக இச்சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார். வரும் பிப்.28 ஆம் தேதி வரை அசாம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதனால் இது தொடர்பான மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, அசாம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்களும் குறையும். இதுவரை மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்துவந்த 94 பதிவர்களுக்கும் சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக உள்ளன. இதற்குப் பதிலாக, அனைத்து மதத்தினரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.