அசாமின் போங்கைகான் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரரின் மகளான 73 வயது, சேஜே பாலா கோஷ், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் என்று மார்ச் 2020 இல் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திடமிருந்து (FT) நோட்டீஸ் வந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தனது இந்திய குடியுரிமையை நிரூபிக்க சேஜே பாலா கோஷ் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கு தற்போது வெற்றிகிடைத்துள்ளது.

சேஜே பாலா இந்திய குடிமகள் தான் என்பதை நீதிமன்றம் ஒரு சில தினங்களுக்கு முன் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், “சந்திர சேகர் ஆசாத்துடன் நெருக்கமாக இருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர் எனது தந்தை. ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் மகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் போது மனம் இன்னும் வேதனையில் உள்ளது” என்று கூறினார்.

போங்கைகான் மாவட்டத்தில் உள்ள சல்பகன் கிராமத்தில் தனியாக வசித்து வரும் சேஜே பாலா தனது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களை சமர்ப்பித்ததோடு தனது பெற்றோர் யார் என்பதை உறுதி செய்ய தேவையான சான்றுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த பின்னர் நீதிமன்றம் சேஜே பாலா இந்தியர் என்ற முடிவுக்கு வந்ததை அடுத்து அதனை உறுதிசெய்து சான்று வழங்கினர்.

நீதிமன்றத்தின் உத்தரவைக் கையில் வாங்கிய சேஜே பாலா கண்ணீர் மல்க, “இந்திய சுதந்திரத்திற்காக போராடிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை ஒரு பங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறியது மிகவும் வேதனையளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.