அசாம் மாநிலம் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

2015ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு தாவிய இவருக்கு உடனடியாக அசாம் மாநில முதல்வர் பதவி கிடைத்ததை அடுத்து பாஜக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள ஹெலிகாப்டர்கள் மற்றும் வாடகை விமானங்கள் மூலம் அசாமின் மூலைமுடுக்கு மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் சென்று வருகிறார்.

இந்த தனி விமான பயணங்களுக்கான செலவு குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் மாநில அரசின் நிதியில் இருந்து பல கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்ட பல்வேறு விதிகளை காற்றில் பறக்க விட்டு அசாம் மக்களின் வரிப்பணத்தை தனது கட்சி நிகழ்ச்சிகளுக்காகவும் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா பயன்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கட்சியில் சேருவதற்கு முன் இவர்மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிவந்த பாஜக, அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா செய்துள்ள இந்த விதிமீறல்கள் குறித்து கவலைப்படாமல் வாஷிங் மெஷினில் வெளித்தது போல் அப்பழுக்கற்றவர் என்று அவரை முன்னிலைப் படுத்துவதிலேயே முனைப்பு காட்டிவருகிறது.

2022 ஆகஸ்ட் 26 அன்று தி கிராஸ்கரன்ட் என்ற அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதிலில் திருமண விழாக்கள், கட்சி விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் சென்ற அசாம் முதல்வர் அதற்காக மாநில அரசின் நிதியை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அரசு விழாக்கள் தவிர வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அரசுப் பணத்தை பயன்படுத்தக்கூடாது என்ற விதி இருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் செயல்பட்டிருப்பது அப்பட்டமான விதிமீறல் என்று கூறப்படுகிறது.

2022 ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த RTI விண்ணப்பத்திற்கு உரிய பதிலளிக்காமல் சால்ஜாப்பு காட்டிவந்த நிலையில் மாநிலத் தகவல் ஆணையத்தில் மேற்கொண்ட முறையீட்டை அடுத்து 2023 செப்டம்பர் மாதம் 30 ம் தேதி சில தகவல்களை மாநில பொதுத் தகவல் அதிகாரி வழங்கியுள்ளார்.

அதேவேளையில் 2023 செப்டம்பரில், நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அரசு விழாக்களுக்கு மட்டுமே முதல்வரின் தனி விமான பயணங்களுக்கு மாநில அரசின் பணம் செலவிடப்பட்டதாகக் கூறியிருந்தது.

ஆனால், டெல்லி மற்றும் திரிபுரா மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்ற ஹிமந்த் பிஸ்வா-வின் தனி விமான பயணங்களுக்கான செலவை அசாம் மாநில அரசு ஏற்றுக்கொண்டது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது கட்சிக்கான தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொண்டு பேசிய ஹிமந்த் பிஸ்வா பாஜக மேலிடத்தின் நம்பிக்கைக்குரிய நபராக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்ட நடைமுறைகளை மீறியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியாகி இருப்பதை அடுத்து பாஜக-வினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.