கோவை

ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பூங்கா கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஒன்றிணைந்த பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் தா மோ அன்பரசன் கூறி உள்ளார்.

நேற்று கோவையில் கோவை மாவட்ட தொழில் அமைப்புகள் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்  நடந்தது.   இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன், தொழில் துறை செயலர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் தா மோ அன்பரசன் செய்தியாளர்களிடம், “கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கோவையில் மிகப்பெரும் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும் என்பதற் காக முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரும் தொழிற்பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டு, கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதிகளை ஒருங்கிணைத்து 316 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்குப் பிறகு வந்த அதிமுக அரசு, அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்த திட்டம் முடங்கிய நிலையில் உள்ளது. தற்போது அந்த திட்டம் மீண்டும் வரவுள்ளது. நிலம் கையகப்படுத் தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து,அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி விரைவில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பூங்கா  அமைக்கப்படவுள்ளது. இந்த தொழிற்பூங்கா அமைக் கப்பட்டால் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.