புவனேஸ்வர்,

டிசாவில் நடைபெற்று வரும ஆசிய தடகள போட்டியில் தமிழக வீரர் தங்கம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

22வது  ஆசிய தடகள போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று முன்தினம் மாலை கோலாகலமாக  தொடங்கியது.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய போட்டியில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். வரும் 9ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து  நேற்று நடைபெற்ற  5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.28 மீட்டர் தூரம் குண்டு எறிந்து இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று பதக்கப்பட்டிலில் இந்தியாவை பதிவு செய்தார். மன்பிருத் கவுரின் 27வது பிறந்தநாளான நேற்று அவர் தங்கம் வென்றது அவருக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என அவர் கூறினார்.

அதையடுத்து ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. தொடக்கம் முதலே  ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் ஜி.லட்சுமணன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அவர் இலக்கை 14 நிமிடம் 54.48 வினாடிகளில் கடந்து முதலாவதாக வந்தார்.

இதன் மூலம் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ராணுவத்தில் பணியாற்றி வரும் லட்சுமணன் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில்  ஆண்களுக்கான வட்டு எறிதலில் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், 4 முறை ஆசிய சாம்பியனுமான ஈரான் வீரர் இசான் ஹடாடி 64.54 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார்.

மலேசிய வீரர் இர்பான் முகமது 60.96 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆனால், 2 முறை சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கவுடா 60.81 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமே பெற முடிந்தது.

நீளம் தாண்டுதலில் நீனா (வெள்ளிப்பதக்கம்), நயன் ஜேம்ஸ் (வெண்கலம்), பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சஞ்ஜீவினி யாதவ் (வெண்கலம்), ஈட்டி எறிதலில் அனுராணி (வெண்கலம்) ஆகியோரும் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்றுத்தந்தனர்.

ஒரே நாளில் இந்தியாவுக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.