டில்லி:

இந்தியாவில் நடைபெற உள்ள 17-வயதிற்குட்பட்டோருக்கான ஃபீஃபா உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.

இந்த ஃபீஃபா 2017 உலக கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இப்போட்டிகள் கொல்கத்தா, கொச்சி, டில்லி, நவி மும்பை, கவுகாத்தி, மர்கோவா ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.

இந்த போட்டிகளில் விளையாட இந்தியா, ஈரான், அமெரிக்க உட்பட 24 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா மற்றும் காணா அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்தியா தனது முதல் போட்டியில், இந்தியா அமெரிக்காவை எதிர்கொள்கிறது. தொடரின் முதல் நாளான அக்டோபர் 6-ம் தேதி 2வது போட்டியாக இது நடைபெறுகிறது. இதுதவிர, கொலம்பியா அணியுடன் 9-ம் தேதியும், காணா அணியுடன் 12-ம் தேதியும் இந்திய அணி விளையாடுகிறது.

நாக்-அவுட் சுற்று போட்டிகள் அக்டோபர் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும், அரையிறுதி போட்டிகள் 25 தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி அக்டோபர் 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

அணிகள் விவரம்:-

குரூப் ஏ: இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, காணா

குரூப் பீ: பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி

குரூப் சி: ஈரான், குனியா, ஜெர்மெனி, கோஸ்டா ரிக்கா

குரூப் டி: வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின்

குரூப் ஈ: ஹாண்டுரஸ், ஜப்பான், நியூ கலிடோனியா, பிரான்ஸ்

குரூப் எஃப்: ஈராக், மெக்ஸிகோ, சிலி, இங்கிலாந்து