இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் முக்கியப் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் கூட கிடைக்கவில்லை. இந்த நிலைதான், ஆஸ்திரேலியாவை 300 ரன்களைத் தாண்ட வைத்துள்ளது.

உமேஷ் யாதவிற்கு பதிலாக களமிறங்கிய நவ்தீப் சைனி, துவக்க வீரர் புகோவ்ஸ்கியை அவுட்டாக்கி திருப்பம் தந்தார். முகமது சிராஜ், மிக முக்கியமான டேவிட் வார்னரை 5 ரன்களுக்கே காலி செய்தார்.

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை அள்ளி அணியைக் காப்பாற்றினார். பும்ராவுக்கு 2 விக்கெட்டுகள் தாமதமாக கிடைத்தன. ஆனால், அஸ்வினுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸ்களில், ஸ்மித்தை காலி செய்தவர் அஸ்வின். இதனால், ஸ்மித்த‍ை, அஸ்வினுக்கான ‘முயல் குட்டி’ என்றே அழைக்கத் தொடங்கினர். அதாவது, ஒருகாலத்தில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு, எப்படி ரிக்கிப் பாண்டிங் கிடைத்தாரோ, அதைப்போன்றே அஸ்வினுக்கு, ஸ்மித் கிடைத்துவிட்டார் என்று பேசப்பட்டது.

ஆனால், சிட்னி டெஸ்ட்டின் முதல் இன்னங்ஸ், அஸ்வினுக்கு பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது. ஸ்மித்திடம் அவரின் பாட்சா இந்தமுறை பலிக்கவில்லை. கடைசிவரை அவுட்டாக்க முடியாத ஸ்மித், ரன்அவுட் ஆக்கப்பட்டே வெளியேற்றப்பட்டார்.

ஒருவேளை, அஸ்வின், கடந்த நிகழ்வுகளைப்போல், இந்தமுறையும் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றியிருந்தால், ஆஸ்திரேலியாவிஸ் ரன் எண்ணிக்கை பெரியளவில் குறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.