அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய குடியரசை “நிபந்தனையின்றி சரணடைய” கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் கூறியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் ஆறாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்க அதிபரின் இறுதி எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி : “போர் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு கருணை காட்ட மாட்டோம்,” என்று அவர் கூறினார்.
நட்பு நாடான இஸ்ரேலின் குண்டுவீச்சில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லையென்று டிரம்ப் கூறியுள்ளபோதும் ஈரான் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவது தனது பொறுமையை சோதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
மாவட்டம் 18 எனப்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இராணுவம் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஜூன் 18 அன்று விடியற்காலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய தலைநகரை குறிவைத்தன.
தெஹ்ரானின் பைரூசி, சபாலன் மற்றும் சயாத் பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவம் ஈரானிய மைய உற்பத்தி வசதி மற்றும் பல ஆயுத உற்பத்தி தளங்களைத் தாக்கியதாகக் கூறியது.
ஈரான் மீது இஸ்ரேல் குறிப்பிடத்தகுந்த தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையிலும் ஈரானின் தாக்குதலை முறியடித்து மேலும் முன்னேற அமெரிக்க ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களின் உதவி தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை ஒழித்துக்கட்டும் வரை இந்தப் போர் ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.