சென்னை
வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளி பாடப்புத்தகங்க்ள் இன்னும் அச்சடிக்கப்படாததால் அவை இணையத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
நாடெங்கும் பரவி வரும் கொரோனா தாக்கத்தால் ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டிருந்த தேசிய ஊரடங்கு மே ,மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூட்டுள்ளன. பட்டப்படிப்புக்கான செமஸ்டர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் வரும் கல்வி ஆண்டு தொடக்கத்தில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.
தமிழக அரசு ஒன்பதாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு இன்னும் நடைபெறவில்லை. அது மட்டுமின்றி வரும் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிப்பு பணி இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சடிக்க மார்ச் 9 ல் டெண்டர் விடப்பட்டது.
சுமார் 10 கோடி புத்தகங்கள் அச்சடிக்க விடப்பட்ட இந்த டெண்ட்ர் மார்ச் 3 ஆம் வாரம் முடிவு செய்யப்பட்டு ஏப்ரல் முதல் வாரம் அச்சடிப்பு தொடங்க வேண்டும். ஆனால் ஊரடங்கால் தற்போது அனைத்து அச்சகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அச்சடிக்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இது மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாடப் புத்தகம் அச்சடிப்பதில் ஏற்படும் கால தாமதத்தால் மாற்று ஏற்பாடாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் இணையத்தில் முதல் கட்டமாக வெளியிட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 8 மற்றும் 9 ஆம் வகுப்பு புத்தகங்கள் இணையத்தில் வெளியாகும் எனவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
பாடப்புத்தகங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டால் அது கிராமப்புற மாணவர்களுக்கு சென்றடையுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளதாகக் கல்வி ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.