சென்னை
சென்ற ஒரு மாதமாக புரட்டாசி விரதம் இருந்த அசைவ பிரியர்கள் இன்று காசிமேட்டுக்கு மீன் வாங்கக் கூட்டமாகச் செல்கின்றனர்.
பொதுவாகவே ஞாயிறு அன்று விடுமுறை என்பதால் அசைவ உணவைப் பலரும் விரும்பி சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. இதில் குறிப்பாக மீன் உணவுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். சென்ற மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவு உட்கொள்ளாமல் பலர் இருந்துள்ளனர். தற்போது புரட்டாசி மாதம் முடிவுக்கு வந்துள்ளது.
எனவே இன்று முதலே அசைவப் பிரியர்கள் காசிமேடு மீன் அங்காடிக்கு படை எடுத்துள்ளனர். கொரோனா தொற்றால் முன்பு காசிமேடு மீன் அங்காடிக்குப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அசைவ பிரியர்கள் கூட்டமாக மீன் வாங்க இங்கு கூடி உள்ளனர்.
தற்போது மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் மலிவான விலையில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. எனவே இவற்றை வாங்க பொதுமக்கள் இங்கு ஏராளமாகக் கூடி உள்ளனர். ஆயினும் மீன் வியாபாரிகள் முன்பு இருந்த அளவுடன் ஒப்பிட்டால் இப்போது இங்கு கூட்டம் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.