டில்லி

ங்கில வழி மூலம் கல்வி அளிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தாய்மொழி வழி கல்விக்கு மாற வேண்டாம் என தேசிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக்கொள்கை குறித்து பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் நிலவி வருகின்றன.   தாய்மொழிக் கல்வி மற்றும் மும்மொழிக் கல்வி குறித்து பல கருத்துக்கள் உள்ளன. குறிப்பாக மூன்றாம் மொழியாகச் சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக எழுந்த தகவலால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தாய் மொழி மூலம் கல்வி பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதையொட்டி ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் பல தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் தாய் மொழி வழிக கல்விக்கு மாற வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டது.   ஆரம்ப வகுப்புக்களைத் தாண்டி நடுத்தரப் பள்ளி வகுப்புக்களில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் சிரமத்தை அளிக்கும் எனக் கல்வி ஆர்வலர்கள் தெரிவித்தனர்

இது குறித்து தேசிய கல்விக்கொள்கை குழு தலைவர் கஸ்தூரி ரங்கன்,”இந்த கல்விக்கொள்கை மூலம் எவ்வித திணிப்பு நடைபெறாது. இந்தியா ஒரு சுதந்திர நாடு,   கல்வி என்பது அத்தியாவசியமானது. எனவே இது குறித்து அனைத்து மாநிலங்களும் முடிவு எடுக்க வேண்டும்.    ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் தாய்மொழி வழிக்கல்விக்கு மாற வேண்டாம்.

இந்த கொள்கையில் தாய் மொழி அல்லது வட்டார மொழி மூலம் கல்வி கற்பது குழந்தைகளால் எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ள்து.  பல ஆண்டுகளாகவே நாட்டின் பல பள்ளிகளில் ஆங்கில வழிக கல்வி நடைமுறையில் உள்ளது.  இதில் இருந்து தாய்மொழி அல்லது வட்டார மொழி வழியாகக் கல்வி கற்பிக்க வேண்டும் என எப்போதும் வற்புறுத்தியதில்லை.  இந்த கொள்கையிலும் அவ்வாறு வற்புறுத்தல் இல்லை.

மும்மொழி கொள்கை என்பது மாநிலங்களைப் பொறுத்து மறுப்பு உள்ளது.  மாநிலங்கள் விரும்பும் மூன்றாவது மொழியைத் தேர்வு செயலாம்.  குறிப்பாகத் தமிழகத்தில் இந்த மும்மொழி திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனப் பல கல்வி அமைப்புக்கள் சொல்கின்றன.  அதை மீறி யாரும் வலியுறுத்த முடியுமா?  எந்த ஒரு மாநிலத்துக்கும் எவ்வித வலியுறுத்தலும் செய்யப்பட மாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.