சென்னை :
சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சைதாப்பேட்டை ,அண்ணா நகர்,எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை ,கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட இடங்களில் கனமழை விடிய விடிய பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், #chennairains ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. 5 மணி நேரம் விடாது கனமழையால் சென்னையில் 20 செமீ மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக மயிலாப்பூரில் 200 மிமீ மழை பெய்துள்ளது.டிஜிபி அலுவலகம் 178மி. மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 114 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. 2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.