கராச்சி

மிகவும் எதிர்பார்க்கபட்ட எண்ணெய் கிணற்றில் எண்ணெய் மற்றும் வாயு இல்லாததால் தோண்டுவதை பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது.

பாகிஸ்தான் அரசு சுமார் நான்கு மாதங்கள் முன்பு கராச்சி கடற்கரை ஓரமாக உள்ள கேக்ரா பகுதியில்  எண்ணெய் வளம் உள்ளதை கண்டறிந்ததாக கூறியது. அதை ஒட்டி இத்தாலி நாட்டை சேர்ந்த ஈ என் ஐ என்னும் நிறுவனம் இந்த இடத்தை தோண்டி எண்ணெய் எடுக்க ஒப்பந்தம் இட்டது. அதன் பிறகு அமெரிக்கா உள்ளிட்ட மேலும் நான்கு நிறுவனங்கள் இந்த பணியில் இணைந்தன.

இதை ஒட்டி பாகிஸ்தான் அரசு இனி தமது நாடு எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தில் தன்னிறைவு பெறும் என அறிவித்தது. அத்துடன் இந்த பணியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இணைந்ததால் இந்த எண்ணெய் கிணறுகள் உலக அளவில் பேசப்பட்டது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இனி தமது நாடு எண்ணெய் இறக்குமதி செய்ய தேவை இருக்காது என அறிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் செய்திதாளான டான் பத்திரிகையில், “முதலில் இத்தாலிய கம்பெனியால் தோண்டப்பட்ட கேக்ரா 1 பகுதியில் மிகச் சிறிய அளவில் எண்ணெய் எடுக்கபட்டு அதன் பிறகு எண்ணெய் கிடைக்கவில்லை. அதனால் அந்த கிணற்றை மூடி விட்டு மற்ற இடங்களில் தோண்டும் ப் அணி தொடங்கியது. இது வரை 17 இடங்களில் தோண்டப்பட்டு எங்கும் எண்ணெய் வளம் இல்லாத நிலை உள்ளது கண்டறியப்பட்டது.” என செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அதிகாரி ஒருவர், “இதுவரை 5500 மீட்டர் ஆழம் தோண்டியும் எண்ணெய் வளம் இல்லாத நிலை உள்ளது. எனவே இனி மேலும் தோண்டுவது பயன் அளிக்காது என முடிவு செய்யப்பட்டு தோண்டுவது நிறுத்தபட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 10 கோடி டாலர் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியின் மூலம் எதிர்காலத்தில் எண்ணெய் கிணறு தோண்டுவதில் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.