ண்டன்

ங்கி மோசடி குற்றவாளிகளில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு அழைத்து வரும் நிலையில் மற்றவர்கள் வழக்கு என்ன ஆகும் என கேள்வி எழுந்துள்ளது.

வங்கி மோசடி செய்து இந்திய நாட்டை விட்டு ஓடிய 313 குற்றவாளிகளில் 224 பேர் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.   இவர்களில் நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியா அழைத்து வரப் பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி என பலராலும் போற்றப்படுகிறது.  இது பிரதமர் மோடிக்குக் கிடைத்த வெற்றி எனவும் பாஜகவினரால் புகழப்படுகிறது.  இது குறித்து மேலும் இங்கு காண்போம்

பொதுவாக நாட்டை விட்டு இவர்களால் எவ்வாறு தப்பி ஓட முடிகின்றது என்பதை முதலில் பார்ப்போம்.  இங்கிலாந்தில் முதலீட்டாளர் விசா வாங்க ஒருவர் 20 லட்சம் பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.20.5 கோடி ரூபாய் அந்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும்.  அத்துடன் அங்குத் தனது சொந்தப்பணத்தை செலவிட முடியும் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.   அதன்பிறகு அவருக்கு மூன்று மாதங்களுக்கு மேல் அங்கு தங்க விசா அளிக்கப்படுகிறது.

இதைப் போல் பல நாடுகள் இதே தேர்வை அளிக்கின்றன.  குறிப்பாக நிரவ் மோடி தற்போது பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்.  இதற்குக் காரணம் அவர் அங்கு ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதாகும்.   சுமார் 5 வருடங்கள் அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர்களுக்கு நிரந்தரமாக வசிக்க உரிமையும் மேலும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு குடியுரிமையும் அளிக்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உத்தரவாத கடிதங்கள் பெற்று அதன் மூலம் ரூ.13,500 கோடி மோசடி செய்த நிரவ் மோடி இந்த அடிப்படையில் நாட்டை விட்டு ஓடி பெல்ஜியம் குடிமகனாகி லண்டனில் குடி புகுந்தார். இவரைப் போல் 2015 ஆம் வருடத்துக்கு பிறகு சுமார் 72 இந்தியக் குடிமகன்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடி உள்ளனர்.  இதில் இதுவரை 2 பேரை மட்டுமே இந்தியா கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து தப்பி ஓடும் குற்றவாளிகளை நாடு கடத்தி இந்தியா அனுப்ப 47 நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.   மேலும் 11 நாடுகளில் ஒப்பந்தம் இடும் முயற்சிகள் நடந்து வருகின்றன.   குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் அவ்வாறு ஒப்பந்தம் இல்லை என்பதால் பலர் எல்லை தாண்டி அந்த நாடுகளுக்குத் தப்பிச் சென்று விடுகின்றனர்.

கடந்த 2002 முதல் அரபு அமீரகத்தில் இருந்து 19 பேரும், அமெரிக்காவில் இருந்து 9 பேரும், மற்றும் இங்கிலாந்தில் இருந்து இருவரும் நாடு கடத்தி அழைத்து வரப்பட்டுள்ளனர்.   இங்கிலாந்தைப் பொறுத்த வரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் விதிகளில் பல கடுமையான  பிரிவுகள் உள்ளன.  எனவே இந்த பிரிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து அதன் பிறகே இது குறித்து முடிவு எடுக்க முடியும்.    இங்கிலாந்து நீதிமன்றம் எவ்வித அரசியல் தலையீட்டையும் கருத்தில் கொள்ளாது என்பதால் அரசு இதில் தலையிட முடியாது.

அது மட்டுமின்றி அங்கு ஒவ்வொரு கட்ட தீர்ப்புக்கும் இங்கு மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.    இதைத் தவிர ஐரோப்பிய நாடுகள் மனித உரிமை ஆணையமும் இதில் தலையிட முடியும்.   எனவே இந்தியாவால் பல குற்றவாளிகளை நாடு கடத்தி அழைத்து வர முடியாத நிலை மட்டுமே உள்ளது.  எனவே மற்றவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர முடியுமா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது..