ரோடோ தெரோ, பாகிஸ்தான்

சுகாதாரமற்ற ஊசியை மருத்துவர்கள் பயன்படுத்தியதால் தெற்கு பாகிஸ்தான் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் எச் ஐ வி பாசிடிவ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்

பாகிஸ்தான் நாட்டில் எச் ஐ வி பாசிடிவ் பாதிப்பு உள்ள நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர்.  ஆசியாவில் அதிக அளவில் எச் ஐ வி நோயளிகள் உள்ள நாட்டில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது.   இதற்கு போதை ஊசி பழக்கம் உள்ளவர்களும்  பாலியல் தொழிலாளிகளுமே காரணம் ஆவார்கள்.   இவர்களுக்கு தேவைப்படும் மருந்துகளும் இங்கு கிடைப்பதில்லை.  அது மட்டுமின்றி சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

இங்குள்ள மருத்துவர்களில் பலர் பணம் மிச்சம் செய்வதற்காக ஒரே ஊசியை பல நோயாளிகளுக்கு திரும்ப திரும்ப பயன்படுத்துகின்றனர்.  உலக சுகாதார விதிகளின் படி ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊசிகள் பயன்படுத்த வேண்டும்.  தெற்கு  பாகிஸ்தானில்  உள்ள ரோடோ தெரோ என்னும் சிற்றூரில் இவ்வாறு ஒரு மருத்துவர் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்கு போட்டுள்ளார்.  தற்போது இந்த சிற்றூரில் சுமார் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட பலர் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கிராம மக்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.   இங்குள்ள மக்கள்  கடும் பதட்டம் அடைந்துள்ளனர்.  இது குறித்து  அந்த கிராம வாசியான முக்தார் பர்வேஸ், “எனது மகளுக்கு ஜுரம் என்பதற்காக ஊசி போட சம்மதித்தேன்.  தற்போது அவர் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.   இவர் உயிர் பிழைத்து வளர்ந்தாலும் யாரும் திருமணம் செய்துக் கொள்ள போவதில்லை.   இது போல் பல குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஊசி போட்ட மருத்துவரும் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.   அவர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள நகரில் சிறையில் தனிமைக் காவலில்  வைக்கப்பட்டுள்ளார்.  அவர் தமக்கும் இந்த எச் ஐ வி பரவியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.   தற்போது இந்த ஊர் மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளுக்காக அரசின் உதவியை எதிர்ப்பார்த்துள்ளனர்.